2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக்கோப்பைக்கான கிரிக்கெட் தொடரை இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இதில் சென்னையில் நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் வகையில் சச்சின் டெண்டுல்கர் இரண்டு ரன்களிலும், கவுதம் கம்பீர் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத்தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், விராட் கோலி இணை எதிரணி பந்துவீச்சுக்கு பவுண்டரிகளால் பதிலளித்தனர்.
இதில் விராட் கோலி 59 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் யுவராஜ் சிங் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது தான் ரசிகர்களின் மனதை உலுக்கும் நிகழ்வு அரங்கேறியது. மைதானத்தின் நடுவில் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்துக் கொண்டிருந்த யுவராஜ் திடீரென ரத்த வாந்தி எடுத்து அனைவரையும் ஒரு நிமிடம் பயத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றார்.
போட்டி நடுவர்கள் களத்தைவிட்டு வெளியேறும் படி கூறியும், அதனை மறுத்து மீண்டு களத்தில் தனது அதிரடியை தொடர்ந்தார். ஆனால் ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு மீண்டும் ரத்த வாந்தி எடுத்த அவர், மீண்டும் களத்திலிருந்து வெளியேற மறுத்து இந்திய அணிக்காக தனது அதிரடியை தொடர்ந்தார். மேலும் அந்தப்போட்டியில் சதமடித்தும் அசத்தினார்.
இறுதியில் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பொல்லார்டின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களை எடுத்தது. அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
பந்துவீச்சிலும் எதிரணிக்கு எதிரியாக திகழ்ந்த யுவராஜ் சிங், தாமஸ், ஆண்ட்ரே ரஸ்சல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. அந்தப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
அத்தொடரில் தனது புற்று நோயைப் பற்றி கவலைப்படாமல் இந்திய அணிக்காக விளையாடி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்ற உதவிய பெருமையும் யுவராஜ் சிங்கையே சேரும். பின்னர் புற்றுநோயிலிருந்து குணமடைந்த யுவராஜ் சிங் தனது மோசமான ஃபார்ம் காரணமாக பின்நாட்களில், தேர்வு குழுவினரால் ஓரங்கட்டப்பட்டார். அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்தாலும், அவருக்கான ரசிகர் படை மட்டும் இதுநாள் வரை அவரை விட்டு விலகவில்லை என்றால் அது மிகையாகது.
இதையும் படிங்க: கோவிட்-19: புரோ லீக் தொடர் ஒத்திவைப்பு