கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை எப்போதும் குறைத்து மதிப்பிட கூடாது என்பதை மற்ற அணிகளுக்கு உணர்த்தியது, 1992 உலகக்கோப்பை தொடர்தான். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய இந்த தொடரில் வண்ணமையான கலர் ஜெர்சி, சிவப்பு நிற பந்துகளுக்கு பதில் வெள்ளை நிற பந்துகள், முதல் இரவு பகல் போட்டி போன்று பல்வேறு விஷயங்கள் அறிமுகமாகியதால் கிரிக்கெட்டின் ரெட்ரோ காலமாக பார்க்கப்பட்டது.
இதன்மூலம், தற்போதைய ஒருநாள் போட்டிக்கான நவீன வளர்ச்சியும் இந்தத் தொடரிலிருந்துதான் தொடங்கியது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்றி இருந்தாலும், அனைவரது கவனமும் தென்னாப்பிரிக்க அணி மீதுதான் இருந்தது. இனவெறி சர்ச்சைக்கு பிறகு, அந்த அணி இந்த தொடரில் தான் தனது முதல் உலகக் கோப்பையில் விளையைாடும் உரிமையை பெற்றது.
சச்சின், இன்சாமாம் உல் ஹக், ஜெயசூர்யா,ஸ்டீவ் வாக்,ஜான்டி ரோட்ஸ், போன்ற அடுத்த 90, 2000 காலக்கட்டத்தின் சிறந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது முதல் உலகக்கோப்பையில் விளையாடினர்.
இன்சமாம் உல் ஹக்கை ஜான்டி ரோட்ஸ் ரன் அவுட் செய்தது, முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் மோதியது உள்ளிட்ட பல முக்கியமான நிகழ்வுகளும் இந்த தொடரில் நடந்துள்ளது.
தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் கானின் கடைசி தொடர் இது என்பதால் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவுக்கு எப்படி 1983 ஜூன் 25, மறக்க முடியாத நாளோ அதேபோன்று பாகிஸ்தானுக்கு மார்ச் 25, 1992 என்றுமே மறக்க முடியாத ஸ்பேஷல் நாளாகும்.
87 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் மெல்போர்னில் நடந்த இதன் இறுதி போட்டியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, கிரஹாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மோதியது.
அதுவரை இரண்டு இறுதி போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
தொடக்க வீரர்கள் அமீர் சோஹைல், ரமீஸ் ராஜா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினாலும், நான்காவது வரிசையில் களமிறங்கிய இம்ரான் கான் தனது கடைசிப் போட்டியில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் 72 ரன்களை அடித்தார். அவருடன் ஜாவித் மியான்தாத் தன்பங்கிற்கு 58 ரன்கள் விளாசினார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வாசிம் அக்ரம் 18 பந்துகளில் 33 ரன்கள் விளாச பாகிஸ்தான் அணி 249 ரன்களை சேர்த்தது.
250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிய காத்திருந்தது. அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான இயன் போத்தம் வாசிம் அக்ரம் பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைக் கண்டு இங்கிலாந்து அணி பயப்படத் தொடங்கியது.
வாசிம் அக்ரமின் அபாயகரமான பந்துவீச்சு ஒருபக்கம், முஷ்டாக் அகமதின் சுழற்பந்துவீச்சு மறுபக்கம் என செய்வதரியாது இங்கிலாந்து அணி திணறியது. இருப்பினும் மறுமுனையில் நைல் பேர்பிரதர், ஆலன் லாம்ப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 70 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நைல் பேர்பிரதர் முஷ்டாக் அகமதின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆலன் லாம்ப் 31 ரன்களில் அக்ரம் பந்துவீச்சில் போல்ட்டானார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பை தொடரை வென்று சரித்திரம் படைத்ததோடு மட்டுமில்லாமல் நாங்களும் சிறந்த அணிதான் என்பதை உலகிற்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தது.
இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய வாசிம் அக்ரம், முஷ்டக் அகமது ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இம்ரான் கானின் அசத்தலான பேட்டிங்கும், வாசிம் அக்ரமின் துல்லியமான பந்துவீச்சும் இல்லை என்றால் அவர்களது கனவு நிறைவேறியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றும் என யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் வென்று உலகத்தையே திரும்பி பார்க்கச் செய்தது. இதனால்தான் பாகிஸ்தான் அணிக்கு கணிக்க முடியாத அணி என்ற பெயர் கிடைத்தது. அந்த அணி உலகக்கோப்பை வென்று இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதையும் படிங்க:இன்சமாம் செய்த முதல் மேஜிக்கின் கதை!