பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னே செய்த சாதனைகள் ஏராளம்.
அதில் மிக முக்கியச் சாதனையாக பார்க்கப்படுவது, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், வார்னே தனது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 600ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நிகழ்வு நடந்து நேற்றுடன் (ஆக.11) 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் (Marcus Trescothick) விக்கெட்டை ஷேன் வார்னே கைப்பற்றினார். அதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் வார்னே தனது 600ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். அந்த இன்னிங்ஸில் மட்டும் வார்னே நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 444 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, பேட்டிங்கிலும் வார்னே கைகொடுத்தார். அந்த இன்னிங்ஸில் வார்னே 90 ரன்களை விளாசி, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ஆஸ்திரேலியா அணி 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 280 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அதன்பின் 423 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறப்பாக விளையாடி அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அப்போட்டியை டிரா செய்தது. மேலும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதேசமயம் ஷேன் வார்னே இங்கிலாந்து அணிக்கெதிராக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 195 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நபர் என்ற சாதனையும் படைத்து அசத்தியுள்ளார்.
ஷேன் வார்னே இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.