கங்குலி தலைமையிலான இந்திய அணி நாட்வெஸ்ட் தொடரில் வெற்றிபெற்று இன்றோடு (ஜூலை 13) 18 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அது குறித்த ஒரு பார்வை...
தற்போது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி, குறிப்பாக சேஸிங்கில் பல சாதனைகள் புரிவதற்கு இந்தப் போட்டிதான் தொடக்கப் புள்ளியாக இருந்தது. கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்றன.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் அப்போதைய கேப்டனான நாசர் உசைன், எந்தவித தயக்கமுமின்றி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் நைட் ஆட்டமிழந்தாலும், டிரெஸ்கோத்திக், நாசர் உசைன் இணை இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலைத் தந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து பந்துக்கு பந்து ரன் எடுத்த டிரெஸ்கோத்திக் சதம் விளாசிய கையோடு நடையைக் கட்டினார்.
மறுமுனையில், நிதானமாக ஆடிவந்த நாசர் உசைன் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். எது எப்படியோ, ஒருவழியாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்களை குவித்தது.
பொதுவாக, இறுதிப் போட்டியில் டாஸ் வென்றாலே, பாதி போட்டியில் வெற்றி பெற்றதற்கு சமம். அப்படி இருக்கையில், 300-க்கும் அதிகமான ரன்கள் என்றால், முதலில் பேட்டிங் செய்த அணிதான் போட்டியில் வெற்றிபெறும் என்ற பிம்பமும் இருந்தது.
அதுவரை, ஒருநாள் கிரிக்கெட்டில் 300-க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்வது என்பது அரிதிலும் அரிது. அதுவும், 326 ரன்கள்! லார்ட்ஸ் மைதானத்தில் சேஸிங் என்பதெல்லாம் ’வாய்ப்பே இல்ல ராஜா’ என, இங்கிலாந்து ரசிகர்கள் நினைத்தனர். ஒருநாள் போட்டியில், சாத்தியமே இல்லாததை இந்திய அணி சாத்தியப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த ரசிகர்கள் இருந்தனர்.
வழக்கம்போல், சேவாக், கங்குலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியில், சேவாக்கைவிட கங்குலி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ருத்ரதாண்டவம் ஆடினார்.
ஆஃப் சைடின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் அவர், டாரென் காஃப், அலெக்ஸ் டூடர் ஆகியோரது பந்துவீச்சை ஆஃப் சைடில் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். குறிப்பாக, பிளிண்டாஃபின் பந்தை மிக நேர்த்தியாக நகர்ந்துவந்து, பாயிண்ட் திசையில் சிக்சர் அடித்த ஷாட் இங்கிலாந்து ரசிகர்களையும், "வாவ்" என வாயைப் பிளக்கவைத்தது.
மறுமுனையில், சேவாக் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடினார். இந்த இணை அதிரடியாக 14.3 ஓவர்களில் 106 ரன்களை சேர்த்தது. அப்போதைய கிரிக்கெட் சூழலில், 15 ஓவர்களுக்குள் 100 ரன்கள் அடிப்பதெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும்.
அந்த சமயத்தில், கங்குலி 60 ரன்களுக்கு அவுட். இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கம் அமைந்தது என்ற நினைத்தபோதுதான் வரிசையாக விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழந்தன.
அடுத்த 10 ஓவர்களுக்குள் சேவாக், தினேஷ் மோங்கியா, டிராவிட், சச்சின் ஆகியோர் வரிசையாக பெவிலியனுக்குத் திரும்ப, இந்திய அணியோ 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
சச்சின் ஆட்டமிழந்ததும் பெரும்பாலான ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்துவிட்டனர். இதற்கு முக்கியக் காரணம், 26 ஓவர்களில் 190 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த சமயத்தில், இளம் வீரர்களான யுவராஜ் சிங், முகமது கைஃப் இருவரும் களத்தில் இருந்தனர்.
இருவரும் அதுவரை 50 ஒருநாள் போட்டிகளில்கூட விளையாடியதில்லை என்பதால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், இந்தியாவின் கதை அவ்வளவுதான் என ரசிகர்கள் தலையில் கைவைத்தனர்.
ஆனால், இப்போட்டிதான் இருவரது கிரிக்கெட் பயணத்தையும் முற்றிலுமாக மாற்றி அமைத்தது. இவர்கள் இளம் வீரர்களாயிற்றே, அதனால் எந்தவித பிரஷர் இல்லாமல் தைரியமாகப் பேட்டிங் செய்து, ரன்களை சேர்த்தனர்.
இந்தியாவின் கதை அவ்வளவுதான் என்பதில் இருந்து இனிதான் இந்தியாவின் கதையே இருக்கிறது என்ற வகையில் போட்டி இந்தியாவின் பக்கம் மாறியது. அந்தத் தருணத்தில் யுவராஜ் சிங் 69 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இந்திய அணியின் ஸ்கோர் 41.4 ஓவர்களில் 267 ரன்கள். இன்னும் வெற்றிக்கு 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், முகமது கைஃப் உடன் ஜோடி சேர்ந்து அவருக்கு ஏற்ப ஹர்பஜன் சிங் ஆடியதால், வெற்றி இந்தியாவின் பக்கம் நெருங்கியது, கூடவே அதிர்ச்சியும் நிகழ்ந்தது. ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே இருவரும் அடுத்தடுத்து 48ஆவது ஓவரில் நடையைக் கட்ட அணியின் வெற்றிக்கு 13 பந்துகளில் 13 ரன்கள் தேவை. ஆனால் கையில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.
போட்டி உச்சக்கட்டத்தை எட்டியதால், பெவிலியனில் இருந்த கங்குலி நகத்தை கடிக்க ஆரம்பித்தார். ரசிகர்களும் தங்களது இருக்கையின் நுனியில் உட்கார்ந்து போட்டியை பார்த்தனர்.
இந்த இக்கட்டான தருணத்தில், முகமது கைஃப், ஜாகிர் கானை வைத்து தாக்குப்பிடித்து ஆடினார். அணியின் வெற்றிக்கு நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலை!. ஸ்ட்ரைக்கிலோ ஜாகிர் கான் இருந்தார்.
பிளிண்டாஃப் வீசிய பந்தை அவர் கவர் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சித்தபோது, இங்கிலாந்து அணி தந்த ஓவர் த்ரோ மூலம், ஜாகிர் கான் இரண்டாவது ரன்னையும் எடுத்ததால், இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பெவிலியனில் கங்குலியின் செலிபிரேஷன், குறித்து சொல்லவே வேண்டாம். அந்த செலிபிரேஷனை கிரிக்கெட் மறந்தாலும் லார்ட்ஸ் பெவிலியன் மறக்காது.
அதற்குக் காரணம், இந்திய கிரிக்கெட்டின் மெக்காவான வான்கடே மைதானத்தில் தொடரை சமன் செய்தபிறகு இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப் டி-சர்ட்டை கழற்றியவாறு மைதானத்தை சுற்றி வந்தார். அதற்குப் பதிலடி தரும் விதமாக, கங்குலி தனது டி-சர்ட்டை சுழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
கிரிக்கெட்டில் இதுவரை எத்தனையோ கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளன. இனியும் அரங்கேறும். ஆனால் அவை எதுவும் கங்குலியின் இந்த கொண்டாட்டத்திற்கு பக்கத்தில்கூட அது வராது என்பதே நிதர்சனம்.
இந்த கொண்டாட்டம் லாட்ஜில் அரங்கேறி 18 வருடங்கள் ஆனாலும் இன்றும் நேற்று நடந்தது போல தான் இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என டிவியை ஆஃப் செய்த ரசிகர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பின் நாட்களில் இப்போட்டியை ஹைலைட்ஸ் மூலமே கண்டுகளித்து மெய்சிலிர்த்தனர்.
இந்தப் போட்டிக்கு பிறகு, இந்திய அணியும் ஒருநாள் போட்டிகளில் பலமுறை 300 ப்ளஸ் ரன்களை சேஸிங் செய்துள்ளது. இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் எத்தனை வெற்றிகளைப் பதிவு செய்தாலும், இந்த வெற்றி எப்போதும் தனித்துவம்தான்.
ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவால் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியும்; அதுவும் சச்சின் ஆட்டமிழந்தாலும் பின்வரும் வீரர்களால் டார்கெட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இப்போட்டியில் இருந்துதான் ரசிகர்களுக்கு வந்தது.