நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசிப் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. முன்னதாக, வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ஏழு ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்தார். மறுபக்கம் பிரித்வி ஷா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார்.
இந்த ஜோடி 50 ரன்களைச் சேர்த்த நிலையில், பிரித்வி ஷா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் கோலி மூன்று ரன்களிலும், ரஹானே ஏழு ரன்களிலும் சவுதியின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். பின்னர், புஜாரா - ஹனுமா விஹாரி ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 81 ரன்களை சேர்த்த நிலையில், ஹனுமா விஹாரி 55 ரன்களுக்கு நைல் வாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் நியூசிலாந்து பக்கம் திருப்பியது.
அவரைத் தொடர்ந்து 140 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து நிதானமான விளையாடி வந்த புஜாரா, ஜேமிசன் பந்துவீச்சில் அவுட்டானார். அதன்பின், களமிறங்கிய ரிஷப் பந்த் (12), ஜடேஜா (9), உமேஷ் யாதவ் (0) ஆகியோர் ஜேமிசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் இரண்டு சிக்சர் அடித்து அதிரடிகாட்டிய முகமது ஷமி 16 ரன்களில் போல்டானார்.
இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 194 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, அடுத்த 48 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்திருப்பது, இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை மோசமான நிலையில் இருப்பது உறுதிப்படுத்துகிறது. நியூசிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன் ஐந்து விக்கெட்டுகளையும், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் டாம் லாதம் 27 ரன்களுடனும், டாம் பிளென்டல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: 4 போட்டிகளிலும் வெற்றி: உலகக்கோப்பை டி20இல் மாஸ் காட்டும் இந்தியா!