நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் மன்ரோ - கப்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை முதல் மூன்று ஓவர்களுக்கு 26 ரன்கள் எடுத்த நிலையில், தாக்கூர் வீசிய நான்காவது ஓவரில் டாப் கியருக்கு மாற்றி, ஒரே ஓவரில் 18 ரன்களை எடுத்தது. பவர் ப்ளே ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இளம் வீரர் சிவம் தூபே வீசிய 8ஆவது ஓவரில் கப்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் குறைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 91 ரன்கள் எடுத்தது.
இதனிடையே தொடக்க வீரர் மன்ரோ அரைசதம் கடந்தார். 12ஆவது ஓவரில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடிக்க, அதன் பின் மன்ரோ 59 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த கிராண்ட்ஹோம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, டெய்லர் - வில்லியம்சன் ஜோடி சேர்ந்தது. இந்த இணை அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசியது. அதிலும் ஷமி வீசிய 16ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 22 ரன்கள் சேர்க்கப்பட்டது.
அதன்பின் வில்லியம்சன் டி20 கிர்க்கெட்டில் தனது 10ஆவது அரைசதத்தைப் பதிவு செய்ய அதற்கடுத்த பந்திலேயே 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் செஃபெர்ட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 18 ஓவர்களில் நியூசிலாந்து அணி 182 ரன்கள் எடுத்தது.
19ஆவது ஓவரில் 9 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ராஸ் டெய்லர் 54 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஆஸி.வீரர்!