டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 23ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற காஞ்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து ஆடிய அந்த அணியின் தொடக்க இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தது.
முதல் பவர்-பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி இருந்த காஞ்சி அணி, அதன்பின் அருண் 12, கேப்டன் பாபா அப்ரஜித் 0, சஞ்சய் 2, பிரான்சிஸ் 2 என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் நிலைத்து ஆடிய காஞ்சி அணியின் தொடக்க வீரர் விஷால் வைத்தியா 51ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 133 ரன்களை மட்டும் குவித்தது. ராஜகோபால் சதீஸ் 26 ரன்னுடனும், ரங்கராஜ் சுதீஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். திண்டுக்கல் அணி சார்பில் மோகன் அபினவ் 3, ஹரி நித்தீஸ் 2, அஸ்வின், சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணி வீரர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெகதீசன் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சுமத் ஜெயின் 8, கேப்டன் அஸ்வின் 8 எடுத்து பெவிலியன் திரும்பினர்.
இதன்பின் ஹரி நிஷாந்த் உடன் ஜோடி சேர்ந்த விவேக் அதிரடியாக ஆடினார். இருவரும் காஞ்சி பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசினர். இறுதியில் திண்டுக்கல் அணி 18.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 134 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரி நிஷாந்த் 61 ரன்னுடனும், விவேக் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி நடப்பு தொடரில் விளையாடி ஆறு போட்டிகளிலும், வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.