இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாக பார்க்கப்பட்டாலும், தமிழக ரசிகர்கள் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்த்து வருகின்றனர். ஆனாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்றால், ஒட்டுமொத்த தமிழ்நாடே சேப்பாக்கத்தை நோக்கிதான் படையெடுத்துச் செல்லும். தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமே இருப்பதால், எப்படியாவது போட்டியை பார்த்திட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து போட்டியை ரசிப்பார்கள்.
இதனால், சென்னையில் எப்போதெல்லாம் போட்டி நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் சென்னை சேப்பாக்கம் திருவிழா கோலத்தில் தான் காட்சியளிக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கும் சென்னைக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்ததே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான்.
இதுவரை எத்தனோயோ டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் நடைபெற்றாலும், ஒரு சில போட்டிகள் மட்டுமே க்ளாசிக் போட்டிகளாக மாறுகின்றன. அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கின்றன. சென்னை தினமான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மறக்க முடியாத இன்னிங்ஸ் குறித்து பார்ப்போம்.
1986 டையில் முடிந்த டெஸ்ட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டி டையில் முடிவதற்கு சாத்தியங்கள் மிகவும் குறைவு. இதுவரை 2000க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும், அதில் இரண்டு போட்டிகள் மட்டுமே டையில் முடிந்துள்ளது. அதில், சென்னை சேப்பக்காம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியும் ஒன்று.
1986இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 348 ரன்கள் இலக்குடன் கடைசி நாளில் சிறப்பாக பேட்டிங் செய்தது. சுனில் கவாஸ்கர் சதமடிக்க அதன்பின் அடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்ததும், இந்திய அணி 347 ரன்கள் எடுத்ததன் மூலம் போட்டி சமனில் முடிந்தது.
சயத் அன்வரின் 194
90ஸ் கிட்ஸ்கள் சிறுவயதாக இருந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் யார் என்று கேட்டால், யோசிக்காமல் மறுகனமே சயத் அன்வரின் பெயரைதான் சொல்வார்கள். 1997இல் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆறாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 327 ரன்களை குவித்தது. அதில், சயத் அன்வர் தனது சிறப்பான ஆட்டத்தை சேப்பாக்கத்தில் அரங்கேற்றினார். அதிரடியாக விளையாடிய இவருக்கு, ஒருநாள் போட்டியில் முதலில் இரட்டை சதம் விளாசும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், அவர் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர், இந்திய அணி இப்போட்டியில் தோல்வியடைந்தாலும், ராகுல் டிராவிட்டின் கேம் சயத் அன்வருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருந்தது. கிரிக்கெட்டின் பெருஞ்சுவரான அவர் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அந்தப் போட்டியில்தான் பதிவு செய்தார். ஆனால், சயத் அன்வரால் டிராவிட்டின் சதம் கண்டுக்கொள்ளாமல் போனது.
1999 அறிவுசார்ந்த ரசிகர்கள்
1999இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது. அதுதான் அந்த அணியின் சிறந்த வெற்றி என பாகிஸ்தான் ரசிகர்கள் சமீபத்தில் தங்களது வாக்குகள் மூலம் தேர்வுசெய்தனர்.
20 வருடங்களுக்கு முன் நடைபெற்ற இப்போட்டியில், நடுவரின் சிறு அலட்சியத்தால் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதேசமயம், பாகிஸ்தானின் போராட்ட குணத்தைப் பார்த்த சென்னை ரசிகர்கள் Standing Ovation தந்தனர். இந்தியாவை வென்ற அணிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்கள் கிடைப்பது ஆச்சரியம்தான். அதுவும் பாகிஸ்தான் அணிக்கு கிடைப்பதெல்லாம் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: https://etvbharat.page.link/wPEGUJqRGXxMdrpj7
2008 சேவாக்கின் முச்சதம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களுக்கு எட்டா கனியாக இருந்த முச்சதத்தை சேவாக் 2004 முல்தானிலும், 2008 சேப்பாக்கத்திலும் பறித்தார். அதில், 2008இல் நடைபெற்ற போட்டி அவருக்கு மிகவுமே ஸ்பெஷலனாது. ஏனெனில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி அப்போது பேட்டிங் சொர்கபுரியாக இருந்த சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
ஸ்டெயின், நிதினி போன்ற அச்சுருத்தும் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சேவாக் பவுண்ட்ரிகளாக பறக்கவிட்டு சென்னை ரசிகர்களை குதுகலப்படுத்தினார். இறுதியில் அவர் 319 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அவரது இந்த இன்னிங்ஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரின் சிறந்த இன்னிங்ஸாக இருந்தது.
இந்தியாவின் சாதனையும் சச்சினின் சதமும்
சேவாக் 2008இல் முச்சதம் அடித்த போட்டியில் டக் அவுட் ஆகி சென்னை ரசிகர்களை ஏமாற்றிய சச்சின், அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் வகையில் பேட்டிங் செய்தார்.
சேவாக்கின் அதிரடியிலும் சச்சின் சிறப்பான பேட்டிங்காலும் இந்திய அணி 386 ரன்கள் என்ற இமாலய டார்கெட்டை வெற்றிகரமாக சேஸ் செய்தது. இதுதான், சேஸிங்கில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. குறிப்பாக இப்போட்டியின் வின்னிங் ஷாட்டை சச்சின் பவுண்ட்ரி அடித்து சதம் விளாசியது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
யுவியின் போராட்டம்
2011 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கடைசி லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு மத்தியில் வாழ்விலும் களத்திலும கடுமையாக போராடினார். அப்போட்டியில் அவர் 113 ரன்களை அடித்ததோடு மட்டுமின்றி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். யுவியின் வாழ்வில் இந்த இன்னிங்ஸுக்கு எப்போதுமே தனித்துவம் வாய்ந்தது.
தல தோனி ஸ்பெஷல்
சேப்பாக்கம் குறித்து கூறும்போது தல தோனியை குறிப்பிடாமல் இருக்கமுடியாமா. ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் தோனி தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சென்னையில்தான் தொடங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ரன்களும் சேப்பாக்கத்திலேதான் அடித்தார். அதுபோக, 2012 பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 29 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தபோதும், தோனி அசரமால் சதம் அடித்து மிரட்டினார். அதேபோட்டியில்தான் புவனேஷ்வர் குமார் தனது முதல் பந்திலேயே முகமது ஹபிஸை க்ளீன் போல்ட் ஆக்கினார்.
இதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் தோனி 100ஆவது அரைசதத்தை இங்குதான் பதிவுசெய்தார். 2017இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணி தடுமாறியபோது, தோனி சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதத்தில் சதத்தை தனது இரண்டாவது தாய்வீடான சென்னையில் எட்டினார்.
சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கேவின் சிறந்தப் போட்டிகள் குறித்து பட்டியலிட முடியாது. கப்-பை தூக்கியது முதல் கம்பேக் தந்ததுவரை சென்னையில் நடந்த மேஜிக்தான். மேற்கூறியதைபோல், நமக்கு பிடித்த பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களின் சிறந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் அரங்கேறியுள்ளது.
நான் பார்த்திலேயே சென்னை சேப்பாக்கம் ரசிகர்கள்தான் கிரிக்கெட்டின் அறிவார்ந்த ரசிகர்கள் (Knowledgeable crowd) - வாசிம் அக்ரம் உதிர்த்த வார்த்தைகள் இவை! அது உண்மையும் கூட.