இந்திய அணியின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத் திகழும் ரோகித் ஷர்மா முதலில் 2007 டி20 உலகக்கோப்பை தொடரின்மூலம் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அதுவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவர், 2013 சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்குப் பிறகு முழு நேர தொடக்க வீரராக மாறினார். தனது சிறப்பான ஆட்டத்திறன் மூலம், மூன்று விதமான போட்டிகளிலும் சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில், இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய அணிக்காக ரோகித் ஷர்மா பங்கேற்கும் 98ஆவது டி20 போட்டி இதுவாகும். இதன்மூலம், இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய தோனியின் சாதனையை (98) சமன் செய்துள்ளார்.
![Rohit Sharma](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/sl23b8ao_ms-dhoni-rohit-sharma-sep-2018-twitter_625x300_24_september_18_2209newsroom_1569165150_1080.jpg)
இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா நான்கு சதம், 17 அரை சதம் என மொத்தம் 2,443 ரன்களைக் குவித்துள்ளார். தோனி, ரோகித் ஷர்மாவை அடுத்த இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டியில் விளையாடிவர்களின் பட்டியலில் ரெய்னா 78 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் ரோகித் ஷர்மா ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.