நேற்று (ஏப்.4) நடைபெற்ற தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான் தோல்வியுற்றாலும் பஹார் ஜமானின் இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. 155 பந்துகளில் 193 ரன்கள் எடுத்து ரன்அவுட்டானார். அதில் 18 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும்.
ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா வென்றாலும், கிரிக்கெட் உலகின் இதயத்தை வென்றது பஹார் ஜமான் தான். 30 வயதான ஜமான் பல வியக்கத்தக சாதனைகளைச் இதற்கு முன்னும் செய்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணியில் தனிநபருக்கான அதிகபட்ச ரன்களை குவித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
பாகிஸ்தானில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 150+ ரன்களை இரண்டு முறை தாண்டிய, முதல் வீரர் என்ற பெருமையையும் பஹார் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது இரண்டாவது இரட்டை சதத்தைத் தவறவிட்டாலும், ஒருநாள் போட்டி வரலாற்றில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்களை எடுத்தவர் என்ற தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். இச்சாதனையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் வைத்திருந்தார். 2011இல் வங்கதேசத்திற்கு எதிராக 185 ரன்கள் எடுத்திருந்தார்.
ஒருநாள் போட்டியில் இலக்கைத் துரத்தும்போது எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்
- ஃபக்கர் ஜமான் (193 vs தென்னாப்பிரிக்கா) 2021
- ஷேன் வாட்சன் (185 * Vs வங்கதேசம்) 2011
- மகேந்திர சிங் தோனி (183 * Vs இலங்கை) 2005
- விராட் கோலி (183 vs பாகிஸ்தான்) 2013
தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்
பஹார் ஜமானின் 193 ரன்களை தென்னாப்பிரிக்கா மண்ணில் எந்தவொரு வீரரும் எடுத்ததில்லை. இந்த சாதனையை முன்னதாக, முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ் (185) வைத்திருந்தார்.
- பஹார் ஜமான் - 193 ரன்கள்
- ஃபாப் டூ பிளெசிஸ் - 185 ரன்கள்
- குயின்டன் டி காக் - 178 ரன்கள்
- ஏபி டிவில்லியர்ஸ் - 176 ரன்கள்
இதற்கிடையில், ஜோகன்னஸ்பர்க்கின் தி வாண்டரர்ஸ் மைதானத்தில், ஒருநாள் போட்டியில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமையும் பஹார் ஜமான் பெற்றுள்ளார். முன்னதாக, 2006ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கைத் துரத்தும்போது 177 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்காவின் ஹெர்ச்சல் கிப்ஸ் இச்சாதனையைப் பெற்றிருந்தார்.
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்து ரன்அவுட்டான வீரர்கள்
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்களை எடுத்தபோது ரன்அவுட் ஆனவர்களின் பட்டியலில் பஹார் ஜமான் முதலிடம் பிடித்துள்ளார்.
- பஹார் ஜமான் (193 vs தென்னாப்பிரிக்கா), 2021
- டேவிட் வார்னர் (173 vs தென்னாப்பிரிக்கா), 2016
- எவின் லூயிஸ் (148 vs இலங்கை), 2016
- கெவின் ஓ பிரையன் (142 vs கென்யா), 2007
- சச்சின் டெண்டுல்கர் (137 vs இலங்கை), 1996
ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்
பஹார் ஜமானின் 193 ரன்கள் என்பது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதிவான இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். 2010ஆம் ஆண்டில் சச்சின் அடித்த ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டை சதம் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதிவான அதிகபட்ச ரன்களாகும்.
- சச்சின் டெண்டுல்கர் (200* ரன்கள்) குவாலியர், 2010
- பஹார் ஜமான் (193 ரன்கள்) ஜோகன்னஸ்பர்க், 2021
- மார்டின் குப்தில் (180 ரன்கள்) ஹாமில்டன், 2017
- டேவிட் வார்னர் (173 ரன்கள்) கேப் டவுன், 2016
இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்ஸ்களிலும், 150+ ரன்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் பஹார் ஜமான் ஆவார்.