வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக்கின் 23ஆவது ஆட்டத்தில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி, கீரன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜான்சன் சார்லஸ், ஜோனத்தன் கார்டர் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஜோனத்தன் கார்டர் 51 ரன்களிலும் ஜான்சன் சார்லஸ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜே.பி. டுமினி ருத்ரதாண்டவமாடினார். அவர் 15 பந்துகளில் அரைசதமடித்து எதிரணியின் பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார். தொடர்ந்து அதிரடிகாட்டிய அவர் 20 பந்துகளில் ஏழு சிக்சர்கள், நான்கு பவுண்டரிகள் என 60 ரன்களை வெளுத்து வாங்கினார்.
இதன்மூலம் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணி சார்பில் கீரன் பொல்லார்ட், கேரி பியேரி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 193 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் அந்த அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரன் பிராவோ 28 ரன்களையும் காலீன் முன்ரோ 23 ரன்களையும் எடுத்தனர். பார்படோஸ் அணி சார்பில் ஹேய்டன் வால்ஷ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் பார்படோஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ருத்ரதாண்டவமாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜே.பி. டுமினி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #CPL T20 2019:மிரட்டிய பிராண்டன்... வெற்றிபெற்ற கயானா!