இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதலாவது டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று இரண்டாவது டி20 போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் குவிண்டன் டி காக்கின் அரை சதத்தால் 149 ரன்களை எடுத்தது. பின்னர் 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் அதிரடி ஆட்டகாரர் ரோகித் சர்மா 10 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி எதிரணியின் பந்து வீச்சை நான்கு திசைகளிலும் சிதறடித்தார். கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் அரைசதமடித்த கோலி 71 ரன்களை எட்டிய போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் தனது பெயரை முதலிடத்தில் பதித்து சாதனைப் படைத்தார். இச்சாதனையை விராட் கோலி 77 போட்டிகளில் 2441 ரன்களை அடித்து நிறைவு செய்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டகாரர் ரோகித் சர்மா 97 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2,434 ரன்களுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் 2,283 ரன்களுடன் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் உள்ளார்.
மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
சர்வதேச டி20ல் அதிக அரைசதங்கள்:
- 22 அரைசதங்கள் - விராட் கோலி(இந்தியா)
- 21 அரைசதங்கள் - ரோகித் சர்மா(இந்தியா)
- 16 அரைசதங்கள் - மார்டின் கப்தில்(நியூசிலாந்து)
- 15 அரைசதங்கள் - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)
இதையும் படிங்க...!