ரிக்கி பாண்டிங், டிராவிட், லக்ஷ்மன், யுவராஜ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் தங்களது அணிக்காக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்களுக்கு ஃபேர்வெல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற ரஞ்சிக் கோப்பை ஜாம்பவான் வாசிம் ஜாஃபருக்கு டெஸ்ட் போட்டியில் சரியான ஃபேர்வேல் கிடைக்கவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.
ஆனால் அவரோ டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான டிராவிட், லக்ஷமண் ஆகியோருக்கே இந்திய அணியில் மதிப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். நல்லவேளை இந்த லிஸ்ட்டில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறவில்லை என நினைக்கலாம். ஆனால் அவருக்கு டெஸ்ட் போட்டியிலிருந்துதான் தக்க மரியாதை கிடைத்ததே தவிர ஒருநாள் போட்டியில் கிடைக்கவில்லை.
மார்ச் 18, 2012 சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் லீக் போட்டி மிர்புரில் நடைபெற்றது. 330 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கவுதம் கம்பிர் டக் அவுட்டானாலும், மறுமுனையில், சச்சின் டெண்டுல்கரும் கோலியும் சிறப்பாக விளையாடினர்.
இதில், சச்சின் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 96ஆவது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் கோலி 183 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். சேஸிங்கில் பதற்றமடையாமல் சிறப்பாக விளையாடிய கோலியின் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசியதைப் போல சச்சின் ஒருநாள் போட்டியிலும் 100 அரைசதங்களையும் 50 சதங்களையும் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்தத் தொடருக்குப் பிறகு 2012 இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தான் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாகவும் அதற்காக தான் பயிற்சி மேற்கொள்வதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 30, 2012 இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்தது. அதற்கான டிக்கெட் விற்பனை டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. 2011 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு மீண்டும் சச்சினின் ஆட்டத்தை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டுகழிப்போம் என மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்களும் டிக்கெட்டுகளை வாங்கிவந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்றைய தினம் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியானது.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் என்றச் செய்தி வெளியானது. இதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவிருக்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக் குழுவும் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டியிலிருந்து சச்சின் ஓய்வுபெற்ற செய்தி இந்தியாவை மட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நீங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.
1989இல் பாகிஸ்தானுக்கு எதிராக டக் அவுட் உடன் தொடங்கிய அவரது ஒருநாள் கிரிக்கெட் பயணம் 2012இல் பாகிஸ்தானுக்கு எதிராக 52 ரன்களுடன் முடிவுபெற்றது. இப்போட்டியில் கோலி, 183 ரன்கள் விளாசியது ரசிகர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியை தந்தாலும், இதுதான் சச்சினின் கடைசி போட்டியாக இருந்துவிட்டதே என்ற சோகமும் ரசிகர்களுக்கு பின்நாள்களில் ஏற்பட்டது.
இந்திய அணிக்காக தனது கடைசி ஒருநாள் போட்டியில் சச்சின் களமிறங்கி, இன்றோடு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என சச்சின் தானாக முடிவு எடுத்தாரா அல்லது பிசிசிஐயால் எடுக்கப்பட்ட முடிவா என்பதே அப்போது பேசு பொருளாய் இருந்தது. சச்சினின் இந்த முடிவுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில் சச்சினுக்கும், அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் படேலுக்குமே வெளிச்சம்.
இதையும் படிங்க: 33 இன்னிங்ஸ்... 370 நாள்கள்; 100ஆவது சதம் விளாசிய சச்சின் நினைவலைகள்!