இந்தியாஅண்டர் - 19 அணியின் கேப்டனாக வலம் வந்தவர் உன்முக் சந்த். இவரது தலைமையின் கீழான இந்திய அண்டர்-19 அணி 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா உடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்த உன்முக் சந்த், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
அப்போது பேசிய சந்த், "ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வது எந்தளவுக்கு உற்சாகத்தை அளிக்குமோ, அதே அளவு 19 வயதுக்கு வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையை கைப்பற்றுவதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். ஏனெனில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெல்வது ஒவ்வொரு ஜூனியர் வீரர்களுக்கும் மிகப்பெரும் கனவாகும். அப்படிப்பட்ட ஒரு கனவை எனது கேப்டன்சியில் நான் பெற்றது மிகப்பெரும் பாக்கியம் என கருதுகிறேன்.
அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதேபோல் எனது தலைமையிலான இந்திய அணியும் உலகக் கோப்பையை கைப்பற்றியதால் என்னை விராட் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசினர்.ஆனால் அதன் பிறகு அவருக்கு கிடைத்ததுபோல எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கப்பெறவில்லை.
இந்திய தேர்வு குழுவின் நிலை எப்படி என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் நான் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் அணியை வழிநடத்திச் சென்றனர். அவர்களை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கான இடம் காலியாகும் சமயத்தில், எனது ஆட்டம் சற்று தளர்வுற்றதான் காரணமாக எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.