வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹாசன் தன்னிடம் சூதாட்ட இடைத்தரகர் அணுகியதை ஐசிசியின் ஊழல் தடுப்புக் குழுவிடம் தெரிவிக்காத காரணத்துக்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது.
டெஸ்ட், டி20 போட்டிகளில் கேப்டனாக உள்ள ஷகிப் அல் ஹாசனுக்கு தடைவிதிக்கப்பட்டதால் அவர் இந்திய தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக டி20 கேப்டனாக மஹ்மதுல்லாவும் டெஸ்ட் அணியின் கேப்டனாக மோமினுல் ஹக்கும் செயல்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஷகிப்பிற்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை அதிகமான ஒன்று என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஐசிசியை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், தனது ட்விட்டர் பக்கத்தில், ஷகிப் தடை குறித்து பதிவிட்டார். அந்தப் பதிவில் அவர், ஷகிப்பிற்கு எந்தவொரு இரக்கமும் காட்டக்கூடாது. தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பது பற்றி அடிக்கடி விளக்கப்படுகிறது.
மேலும் சூதாட்ட தரகர்கள் அணுகும்போது அதை உரிய இடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே ஷகிப்பிற்கு இரண்டு ஆண்டுகள் தடை போதாது. அவருக்கான தண்டனை காலத்தை இன்னும் அதிகரித்திருக்க வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்.
இதேபோன்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, ஷகிப்புக்கு விதிக்கப்பட்ட தடை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.