2019 அக்டோபர் மாதத்திலிருந்து 2020 செப்டம்பர் மாதம் வரையிலான இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 27 வீரர்களின் ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் முதன்மையாக ஏ+ கிரேடில் (ரூ.7 கோடி) இந்திய அணி கேப்டன் விரட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து இரண்டாம் நிலையான ஏ கிரேடில் (ரூ.5 கோடி) ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது நிலையான பி கிரேடில் (ரூ.3 கோடி) விருதிமான் சாஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால் ஆகிய 56 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். நான்காம் நிலையான சி கிரேடில் (ரூ.1 கோடி) கேதார் ஜாதவ், சைனி, தீபக் சஹார், மனீஷ் பாண்டே, விஹாரி, ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 8 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஒப்பந்தப் பட்டியிலில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனியின் பெயர் இடம்பெறவில்லை. கடந்தாண்டு ஒப்பந்தப் பட்டியலில் ஏ கிரேடிலிருந்த தோனி, இந்தாண்டு ஒப்பந்த பட்டியலிலிருந்து முற்றிலுமாக கழற்றிவிடப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்குப்பின் நீண்ட நாள்களாக அணியிலிருந்து விலகியிருக்கும் தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தப் பட்டியல் மேலும் பல வினாக்களை தோன்றச் செய்துள்ளது.
பிசிசிஐயின் ஒப்பந்தத்திலிருந்து இளம் வீரரான ப்ரித்வி ஷா, கலீல் அஹமது ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு இந்தாண்டு ஒப்பந்தம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லை. இந்த புதிய ஒப்பந்தம் ரசிகர்களுக்கு அதிர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹோபார்ட் டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் நுழைந்த சானியா மிர்சா