நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், பேட்ஸ்மேன்கள் 90 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணியைத் தோல்வியின் பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இன்றைய ஆட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பேசுகையில், ''இன்றைய நாளில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இந்திய அணியின் தோல்விக்கும், மோசமான செயல்பாடுகளுக்கும் யார் மீதும் பழிபோடும் விருப்பமில்லை.
சில நாள்களில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட மாட்டோம். அப்போது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள். சில நாள்களில் பேட்ஸ்மேன்கள் திணறும்போது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன்.
இன்னும் இரண்டு முழுமையான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கின்றனர். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது ஆட்டம் பற்றி நான் எப்போதும் கவலைகொள்ள மாட்டேன். சில நாள்கள் விக்கெட்டுகள் வரும். சில நேரம் வராது. அதற்காகக் கவலை கொள்ளாமல், அடுத்த முயற்சியைத் தொடங்கவேண்டும். முடிவினைப் பற்றி யோசிக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்தவேண்டும்'' என்றார்.