நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமாக திகழ்பவர் ஜிம்மி நீஷம். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஜிம்மி நீஷம் காயமடைந்தார்.
இதற்காக சிகிச்சைப் பெற்றுவந்த நீஷம், அதன்பின் நியூசிலாந்து உள்ளூர் டி20 தொடரான சூப்பர் ஸ்மேஷ் தொடரின் வெலிங்டன் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். ஆனால் ஐபிஎல் தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால், அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் நீஷமின் மோதிர விரலில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜிம்மி நீஷம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இத்தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.
நியூசிலாந்து அணிக்காக இதுவரை 12 டெஸ்ட், 63 ஒருநாள், 24 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்மி நீஷம், 90 விக்கெட்டுகளையும், 2500க்கும் அதிகமான ரன்களையும் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs AUS : சுந்தர், ஷர்துல் அதிரடியால் ஃபாலோ ஆனை தவிர்த்த இந்தியா!