சச்சின் மீது கொண்ட காதலால் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தான் கண்டுபிடித்த சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டியுள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட்டை தெரிந்தவர்களுக்கு மட்டுமின்றி பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். காரணம் இந்திய கிரிக்கெட் மீது நம்பிக்கை ஏற்பட காரணமாக இருந்த ஒரு வீரர் சச்சின். ஏனெனில் அவரது 24 வருட கிரிக்கெட் பயணத்தில் இந்திய ரசிகர்கள் அனைவரும் சச்சினை ஒரு கிரிக்கெட் கடவுளாகவே பார்த்தனர்.
கிரிக்கெட்டில் எட்ட முடியாத பல சாதனைகளைப் படைத்த சச்சின் கிரிக்கெட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒரு வீரர் ஒரு தொடரில் பங்கேற்காமல் போனாலே ரசிகர்கள் மறந்துவிட்டு அடுத்த வீரரின் புகழ்பாடத் தொடங்குவார்கள். ஆனால் சச்சின் என்ற வீரருக்கு மட்டும் அதில் விதிவிலக்கு. ஏனெனில் அவர் ஓய்வு பெற்ற பின்பும் ’சச்சின், சச்சின்’ என்ற கீதம் இன்னும் சில ரசிகர்களிடமிருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் சச்சின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக குஜராத் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் சிலந்திகள் வகைகளை பிரிப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் துருவ் பிரஜாபதி, தான் கண்டுபிடித்த இரண்டு சிலந்திகளில் ஒன்றிற்கு சச்சினின் பெயரை சூட்டியிருக்கிறார். அந்த சிலந்திக்கு அவர் ”மரீங்கோ சச்சின் டெண்டுல்கர்” என பெயரிட்டுள்ளார்.
சச்சின் தனக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் என்பதால் அந்த பெயரை வைத்ததாக அவர் தெரிவித்தார். மற்றொரு சிலந்திக்கு கேரளாவில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய குரியகோஸ் எலியாஸ் சவேராவின் பெயரை வைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.