வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை (3.8.19) அன்று நடந்த முதல் டி20 போட்டியின் மூலம் இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே நவ்தீப் சைனி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுமட்டுமின்றி, ஆட்டத்தின் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார்.
![Navdeep Saini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4036957_navdeep-saini1.jpg)
இந்நிலையில், முதல் டி20 போட்டியில் நான்காவது ஓவரின்போது, நவ்தீப் சைனி வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரானின் விக்கெட்டை வீழ்த்தினார். இதை கொண்டாடும் விதமாக, இரு கைகளை உயர்த்தி பெவிலியனுக்கு செல்லுமாறு நிகோலஸ் பூரானிடம் ஆக்ரோஷமான முறையில் ஈடுபட்டார். ஐசிசியின் ஒழுங்குமுறை நடவடிக்கை விதியை மீறி இவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அவர் ஏற்றுக்கொண்டதால், ஆட்ட நடுவர் ஜெஃவ் குரோவ் அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கினார். அறிமுக போட்டியிலேயே தகுதியிழப்பு புள்ளி பெற்றதால், இனிவரும் போட்டிகளில் இவரது நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிகிறது.