கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதையடுத்து, ஐபிஎல் தொடரை முடிந்த வரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் வாரம் முதல் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரின் 14அவது சீசனின் லீக் போட்டிகளை மும்பையிலுள்ள நான்கு மைதானங்களிலும், பிளே ஆஃப் போட்டிகளை மொடீராவிலும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், "நடப்பாண்டு ஐபிஎல் சீசனுக்கான லீக் ஆட்டங்களை மும்பையிலுள்ள பிராட்போர்ன் மைதானம், வான்கடே மைதானம், டி.ஒய். பாட்டீல் மைதானம், ரிலையன்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றில் நடத்தவும், பிளே ஆஃப் போட்டிகளை அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்திலும் நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
இத்தகவலினால் ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடும் வாய்ப்புகளை இழப்பது மட்டுமின்றி, ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்’ - வைரலாகும் ராபின் உத்தப்பாவின் காணொலி!