இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி. 38 வயதாகும் தோனி கடைசியாக உலகக்கோப்பை தொடரில் ஆடினார். அதையடுத்து இந்திய ராணுவத்தின் பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரிலிருந்து தானாக முன்வந்து விலகினார்.
உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்தவுடன் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகியது ஓய்வு குறித்த பேச்சுக்கு இடமளித்தது. அதையடுத்து தென்னாப்பிரிக்க தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலும் தோனி தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் தோனி அணியிலிருந்து கழற்றிவிடப்படுகிறார் என பேசப்பட்ட நிலையில், தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தென்னாப்பிரிக்க தொடரிலிருந்தும் தோனி விலகியதால் தான் அவர் தேர்வு செய்யப்படவில்லை என விளக்கமளித்தார்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறார் என சில செய்திகள் இணையதளங்களை ஆக்கிரமித்தன. அதற்கான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
அப்போது தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் தோனி ஓய்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்று பரவி வருவது வதந்தி மட்டுமே என்றார்.
மேலும், 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறிய போதும் சச்சின் ஓய்வு பெற போகிறார் என்ற செய்து வேகமாக பரவியது. ஆனால் சச்சினோ தொடர்ந்து சிறப்பாக ஆடி உலகக்கோப்பையை கைப்பற்றியதோடு, 100 சதங்களை அடித்து சாதனை படைத்த பின்னரே ஓய்வை அறிவித்தார். இதேபோல் தான் தோனிக்கும் நடக்கிறது. எனவே தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்ற செய்தி தோனியை ஒருபோதும் அயர்ச்சியடைய வைக்காது என தோனி ரசிகர்கள் இணையதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.