இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வு குறித்து ஒவ்வொரு நாளும் புரளிகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கங்குலி, தோனி குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சில விஷயங்களை வெளிப்படையாக பேசமுடியாது. சரியான நேரம் வரும்போது தோனியின் நிலை குறித்து அனைவரும் தெரிந்துகொள்வர்.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் நிலைகுறித்து தோனி, தேர்வுக்குழுவினர், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியோர் வெளிப்படையாகவும், தெளிவாகவும் உள்ளோம். சாம்பியன் வீரர்களுக்கு சரியான மரியாதையை வழங்கவேண்டும். இந்திய கிரிக்கெட்டிற்காக தோனி செய்த விஷயங்கள் நிறையவுள்ளது. சில விஷயங்களை கதவுகளை அடைத்துக்கொண்டு பேசுவதே சரி. யார் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என அனைவருக்கும் தெரியும் என்றார்.
தொடர்ந்து ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் தோனியின் நிலை தெரியவரும் என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு, ஐபிஎல் தொடரில் பார்க்கலாம். ஆனால் அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன எனக்கூறினார்.
மேலும் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தோனி பேசுகையில், ஜனவரி மாதம் வரை கிரிக்கெட் குறித்து கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
எனவே ஜனவரி மாதத்திற்குப் பிறகு தோனி கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜான்டி ரோட்ஸூக்கு முன் இவர்தான் கெத்து