இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது உத்தேச அணிகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணை, போட்டி நேரம், மைதானங்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது.
மைதானங்கள் அறிவிப்பு:
இதனையடுத்து சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்களை பிசிசிஐ இன்று அறிவித்தது. அதன்படி இத்தொடரில் எலைட் குழுக்களுக்கான போட்டிகள் பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய நகரங்களிலும், பிளேட் குழுவுக்கான போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
அதேசமயம் இத்தொடரின் நாக் அவுட் போட்டிகளான காலிறுதிச்சுற்று, அறையிறுதிச் சுற்று, இறுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் ஜனவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் இத்தொடரின் காலிறுதி போட்டிகள் ஜனவரி 26 மற்றும் 27ஆம் தேதியும், அரையிறுதி போட்டிகள் ஜனவரி 29ஆம் தேதியும், இறுதி போட்டி ஜனவரி 31ஆம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான குழுக்கள்:
- எலைட் குழு ஏ (பெங்களூரு): ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ரயில்வேஸ், திரிபுரா.
- எலைட் குழு பி (கொல்கத்தா): தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, அசாம், பெங்கால், ஹைதராபாத்.
- எலைட் குழு சி (வதோதரா): குஜராத், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், பரோடா, உத்ரகாண்ட்.
- எலைட் குழு டி (இந்தூர்): சர்வீஸ், சௌராஷ்டிரா, விதர்பா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா.
- எலைட் குழு இ (மும்பை): ஹரியானா, ஆந்திர பிரதேசம், டெல்லி, மும்பை, கேரளா, புதுச்சேரி.
- பிளேட் குழு (சென்னை): சண்டிகர், மேகாலயா, பிஹார், நாகாலாந்து, மணிப்பூர், மிஸோரம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்.
இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு அணி அறிவிப்பு!