காலம்காலமாக கிரிக்கெட் போட்டிகளில், பந்தை உபயோகிக்க ஏதுவாக அதன் மீது உமிழ்நீர் பயன்படுத்துவது வழக்கம். அப்படி செய்வதால் பந்து நன்கு ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதற்கு பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறுகையில், "குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அப்படி தடை நீக்கப்படவில்லை என்றால் கிரிக்கெட் போட்டிகளில் சுவாரஸ்யம் குறைந்து சலிப்பாகவே இருக்கும்.
அதனால் ரசிகர்கள் யாரும் கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் பார்க்கமாட்டார்கள். மேலும் சிறுவர்கள் யாரும் எதிர்காலங்களில் பந்துவீச்சாளர்களாக உருவாக வேண்டும் என்றும் நினைக்க மாட்டார்கள். அப்படி குறுகிய காலத்தில் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்த வேண்டாம் என்றால் ஆடுகளத்தின் தன்மையாவது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தயார்படுத்த வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் ஃபிளாட் பிட்சுகளில்தான் நாங்கள் அதிக போட்டிகளில் விளையாடினோம். அந்த ஃபிளாட் பிட்சுகளில் பந்து எந்தவித ஸ்விங்கும் ஆகவில்லை. கரோனாவுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் ஆடுகளத்தின் தன்மை பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமின்றி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் தயார் செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அக்ரம், வாக்கர், வார்னே ஆகியோரை எதிர்த்து விராட் ஆடியிருந்தால்...!