இலங்கை அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இலங்கை அணியால் 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நேற்றையப் போட்டியில் இலங்கை அணியின் சேஸிங்கின்போது முதல் ஓவரிலேயே குசல் மெண்டிஸின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், மொத்தமாக நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான இவர் இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்க் தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டார்க்கிற்கு பதிலாக அடுத்தப் போட்டியில் பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்பாட் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் அந்த அணி பிரிஸ்பேனில் வரும் புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இலங்கைகைய மீண்டும் சந்திக்கிறது.