உலகக்கோப்பை டி20 தொடர் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. எப்போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர் இம்முறை நான்கு ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படுகிறது. இந்த முறை அனைத்து அணியினரும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஒவ்வொரு அணியினரும் தங்களின் அணியை தற்போது இருந்தே தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான மைக் ஹசி, ரியன் ஹாரிஸ் ஆகியோரை அணியில் தற்போது சேர்த்துள்ளனர்.
இதில் இடக்கை மேட்ஸ்மேனான மைக் ஹசியை ஆலோசகராகவும், வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸை பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளனர். இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப்பின் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்துள்ளனர். 'தான் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புவதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும்; இது தனது ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது' என்றும் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக, முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.