ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவர் தனது மனைவி கைலி உடனான மண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக நேற்று அறிவித்தார். 2012ஆம் ஆண்டு கிளார்க் - கைலி ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு கெல்சீ லீ என்ற நான்கு வயது பெண் குழந்தையும் உள்ளது.
சமீபகாலமாக தனித்தனியே வசித்துவந்த இந்தத் தம்பதியினர், நேற்று தங்களின் ஏழு ஆண்டுகால திருமண வாழ்க்கையை விவாகாரத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதாக கூட்டாக அறிவித்தனர். இருவரும் ஒருமித்த மனதோடு இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் கிளார்க், இந்த விவாகாரத்திற்காக 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விலையாகக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்கி பாண்டிங்கிற்குப் பின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மைக்கேல் கிளார்க், தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2015ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 350க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற கிளார்க், 16 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.