ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 10ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, ஆஷ்டன் டர்னர் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஷ், காலின் முன்ரோ, கிளர்க், மிட்செல் மார்ஷ் என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டர்னரும் 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 19.1 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. ரெனிகேட்ஸ் அணி தரப்பில் லலோர், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு கேப்டன் ஃபின்ச் - ஷான் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இதில் ஃபின்ச் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டதை வெளிப்படுத்தி வந்த மார்ஷ் அரைசதம் கடந்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதனால் 16.3 ஓவர்களிலேயே ரெனிகேட்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரெனிகேட்ஸ் அணியின் ஜோஷ் லலோர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பிபிஎல் 10 : சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!