கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தில் பல்வேறு கிரிக்கெட் கிளப்புகளும் உள்ளன. இதில் பாரம்பரிய கிரிக்கெட் கிளப்பாக மேரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) திகழ்ந்துவருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அமைந்துள்ள இந்த கிளப்தான் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள விதிகளை வகுத்தது.
இந்நிலையில் கடந்தாண்டு இந்த கிளப்பின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து எம்சிசி அணியானது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் ஒரு தொடரிலில் விளையாடுவதற்கும் திட்டமிட்டிருந்தது.
ஆனால், 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கை அணியைச் சேர்ந்த பல வீரர்கள் காயமடைந்தனர். அதில் சங்ககாராவும் ஒருவர். அதன் காரணமாக சங்ககாரா பாகிஸ்தான் நாட்டிற்கு மீண்டும் செல்வாரா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழத்தொடங்கியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக எம்சிசி, பாகிஸ்தான் தொடருக்கு செல்லவுள்ள வீரர்களை நேற்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ரவி போபாராவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் தனது அதிரகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள எம்.சி.சி. அணியை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்த வெற்றியை வில்லியம்சன் பெற்றிருக்க வேண்டும்' - கோலி