இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ பால்பிர்னி 55 ரன்கள் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிய ஒரு ஓவர் மட்டுமே இருந்தது. அப்போது, முதல் இன்னிங்ஸில் 11ஆவது வீரராக களமிறங்கிய ஜாக் லீச், இரண்டாவது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக (நைட் வாட்ச்மேன்) களமிறங்கினார். முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி ரன் கணக்கை தொடங்காமல் இருந்தது.
அதனையடுத்து, இன்று தொடங்கிய இரண்டாவது நாளில் ஜாக் லீச் சிறப்பாக பேட்டிங் செய்தார். மறுமுனையில், மற்றொரு தொடக்க வீரர் ரோறி பர்ன்ஸ் ஆறு ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஜாக் லீச் உடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் அதிரடியாக பேட்டிங் செய்தார்.
இந்த ஜோடி 145 ரன்களை சேர்த்த நிலையில், ஜேசன் ராய் 72 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடிய நைட் வாட்ச்மேன் ஜாக் லீச் இப்போட்டியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், ஜானி பெயர்ஸ்டோவ், மொயின் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், இறுதிக்கட்டத்தில் சாம் கரன் அதிரடியாக ஆடி 37 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி 77.4 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்திருந்தபோது மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 21 ரன்னுடனும், ஸ்டோன் ரன் எதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.