இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரீஎன்ட்ரி தரவுள்ள ரோஹித் சர்மா சதமடித்து கம்பேக் தரவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லக்ஷ்மண், "ரோஹித் சர்மாவை மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக விராட் கோலி இல்லாதபோது ரோஹித்தின் வரவு நிச்சயம் பெரு மகிழ்ச்சியை அளிக்கும். தற்போதுள்ள இந்திய அணியில் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் உள்ளனர். இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும்.
அதிலும் ரோஹித் ஷர்மா தற்போது தனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரது பேட்டிங் திறமை ஆஸ்திரேலிய விக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்று நான் உணர்கிறேன். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓராண்டுக்குப் பிறகு ரீஎன்ட்ரி தரும் ரோஹித் சதமடித்து கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
மேலும் பார்வையாளர்கள், நிபுணர்களிடம் நான் கூறுவது ஒன்றுதான். ஒருபோதும் முன்கூட்டியே எதையும் தீர்மானிக்காதீர்கள். அதிலும் இந்திய அணியை முன்னரே தீர்மானிக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘பள்ளிச் சிறுவர்கள்போல் விளையாடுகிறார்கள்’ - பிசிபியை வம்பிழுக்கும் அக்தர்