கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தில் பல்வேறு கிரிக்கெட் கிளப்புகளும் உள்ளன. இதில் பாரம்பரிய கிரிக்கெட் கிளப்பாக மேரில்போன் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) திகழ்ந்துவருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அமைந்துள்ள இந்த கிளப்தான் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள விதிகளை வகுத்தது. மேலும் விதிகளுக்கு ஒரு பாதுகாவலன் போன்று அங்கம் வகித்தும் வருகிறது.
இந்நிலையில், மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் அடுத்த தலைவராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா நியமிக்கப்படுவார் என்று எம்சிசியின் தற்போதைய தலைவரான அந்தோணி ரெபோர்டு நேற்று அறிவித்தார்.
அக்டோபார் 1ஆம் தேதி பதவியேற்றுக்கொள்ளும் சங்கக்கரா ஓராண்டு அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேராத ஒருவர் எம்சிசியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளது இதுவே முதல்முறையாகும்.
குமார் சங்கக்காரா இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 400 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார். இவரது தலைமையிலான இலங்கை அணி கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் இரண்டாம் இடம் பிடித்தது.