இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 21ஆம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று (மார்ச்.12) அறிவிக்கப்பட்டது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக, தொடக்க வீரர் கிரேக் பிராத்வெயிட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், "வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு, தொடரை வெல்லவும் பிராத்வெயிட் முக்கியப்பங்கு வகித்தார். மேலும் 2015ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியை வழிநடத்திவரும் ஜேசன் ஹோல்டருக்கு இப்பதவியிலிருந்து ஓய்வளிக்கும் வகையில், பிராத்வெயிட்டுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜேசன் ஹோல்டர் தலைமையில் 37 டெஸ்ட் போட்டிகளை எதிர்கொண்டு 11 வெற்றி, 5 டிரா, 21 தோல்விகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட்: சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய மிதாலி ராஜ்!