இந்திய அணியின் கேப்டனும், உலகின் முன்னணி கிரிக்கெட் வீரருமானவர் விராட் கோலி. தனது அசத்தலான பேட்டிங் திறனால் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளைத் தகர்த்துள்ள விராட் கோலி, சில சமயங்களில் மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கோலி, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 63 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது.
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் கோலி, ஒவ்வொரு ஆண்டிலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பார்.
ஆனால் இந்தாண்டு கரோனா சூழலால் பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கோலி சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆண்டை சதமடிக்காமல் நிறைவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘நடராஜன் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் ஊருக்கே பெருமை’ - தாயார் பெருமிதம்