இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினாட்டில் நடைபெற்றுவருகிறது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கோலி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 120 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் தனது 42ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இவரது உதவியால் இந்திய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது.
இப்போட்டியில், விராட் கோலி 120 ரன்களை அடித்ததன் மூலம் பல சாதனைகளை முறியடித்துள்ளார். அதன் விவரங்கள் இதோ.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் (2031). இதனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தாத்தின் (1930) சாதனை முறியடிக்கப்பட்டது.
- ஒரு அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் (34) 2000 ரன்களை எடுத்த முதல் வீரர்.
- தனி ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் (ஆறு) விளாசிய முதல் கேப்டன்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் (8)அடித்த முதல் வீரர்.
- இந்திய அணியில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் . இதன்மூலம், தாதா கங்குலியின் சாதனை (11, 363) முறியடிக்கப்பட்டது.