2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பீட்டர்சன். இவர் 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஆடினார். சமீபத்தில் ஆர்சிபி அணியுடனான உறவு, விராட் கோலியுடன் ட்ரெஸிங் ரூமில் நடந்த சம்பவங்கள் என சில நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ''2009ஆம் ஆண்டின்போது ஆர்சிபி அணிக்காக விராட் கோலியுடன் இணைந்து ஆடியுள்ளேன். அப்போது அவர் மிகவும் சிறிய வீரர். ஆனால் அப்போது பேட்டிங்கை அவர் அணுகிய விதம், அவர் என்னிடம் கேட்ட கேள்விகள், அவருடன் விளையாடியது என அனைத்தும் அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்திற்குச் செல்வார் என உணர்வதற்கு உதவியது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக நானும், அவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தோம். ஆனால் எதிர்பாராவிதமாக அவரால் நான் ரன் அவுட் ஆனேன். ஆனால் ஒரு இளைஞராக அணியை வெற்றிபெறுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார். அவர் இப்போது இருக்கும் நிலை எனக்கு அப்போதே தெரிந்தது. எங்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கிறது. அந்த நேரத்தில் நான் அவருடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு உதவியுள்ளேன் என நினைக்கிறேன்'' என்றார்.