ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. ஏற்கெனவே இத்தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்குச் சென்று பயிற்சியை மேற்கொண்டுவருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், இந்திய அணியை வெற்றிபெற வேண்டும் என்றால், நாங்கள் கோலியை அமைதியாக வைத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்மின்ஸ், “ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் என ஒரு சிலர் இருப்பர். அதிலும் இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் போன்ற கேப்டன்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிகவும் அவசியமானதாகும்.
அந்த வரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றுவது கடினமான ஒன்றாகும். மேலும் நாங்கள் இந்திய அணியை வெற்றிபெற வேண்டும் என்றால், களத்தில் கோலியை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
ஏனெனில் அவரின் ஆக்ரோஷமான ஆட்டம் நிச்சயம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் எங்கள் அணி வீரர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். முடிந்தவரை களத்தில் கோலியை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் என்பதுதான்” என்றார்.
இதையும் படிங்க:தெற்கு ஆஸி.யில் ஊரடங்கு; அடிலெய்ட் டெஸ்ட் நடக்குமா?