இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையே 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் கோப்பையை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. ஏனெனில் அத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி சபீர் ரஹ்மானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 166 ரன்களைக் குவித்து, இந்திய அணிக்குச் சவாலான இலக்கை நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக ஷிகர் தவான் 10 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா ரன் ஏதுமின்றியும், கே.எல். ராகுல் 24, மனீஷ் பாண்டே 28 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். மறுமுனையில் நிதானமாக விளையாடிய அன்றைய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்திருந்தாலும், 56 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தையே கொடுத்தார்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற 34 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் தினேஷ் கார்த்திக் - விஜய் சங்கர் இணை பேட்டிங் செய்தது. இதில் தினேஷ் கார்த்திக் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்து எதிரணியை மிரளவைத்தார்.
தொடர்ந்து அந்த ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என விளாசி 22 ரன்களைச் சேர்த்தார். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை எதிர்கொண்ட விஜய் சங்கர் முதல் இரண்டு பந்துகளில் ரன் எதையும் எடுக்காமல், நான்காவது பந்தில் பவுண்டரி விளாசி அணிக்கு நம்பிக்கையளித்தார். இருப்பினும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஏனெனில் கடைசிப் பந்தில் இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்சரை விளாசி அணிக்கு த்ரில் வெற்றியைத் தேடித்தந்தார்.
முன்னதாக அப்போட்டியில் பாம்பு நடனம் என்ற பெயரில் வங்கதேச அணி செய்த அலப்பறைகளால் மைதானம் பட்டப்பாடு அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அந்த ஒரு சிக்சர் இந்தியர்கள் மட்டுமின்றி இலங்கை ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
வங்கதேச அணிக்கெதிராக தினேஷ் கார்த்திக் செய்த இச்சம்பவம் முடிந்து இரண்டு ஆண்டுகளை கடந்ததை அடுத்து, அக்காணொலியை தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தினேஷ் கார்த்திக்கின் பதிவுக்கு கருத்து கூறிய இர்ஃபான் பதான், “இந்தியாவின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: IND vs ENG: ஒருநாள் அணியில் நடராஜன்; சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்க்கும் வாய்ப்பு!