பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது. இதனிடையே கராச்சியில் இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் இணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 63, பாபர் அசாம் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை பந்துவீச்சில் லகிரு குமாரா, லசித் எம்புல்தேனியா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் விஸ்வா பெர்னான்டோ இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, நிதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஓஷோ பெர்னான்டோ 4 ரன்களிலும், திமுத் கருணாரத்னே 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவருக்கு அடுத்துவந்த குசல் மெண்டிஸ் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது.