தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி முடிந்தபின், இந்திய - வங்கதேச வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் களத்தில் ஓடிவந்த வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களிடம் சற்று எல்லை மீறி நடந்துகொண்டனர். இதனால், இரு அணிகளின் வீரர்களுக்கிடையே களத்தில் கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஐசிசி தகுதி இழப்பு புள்ளிகளை வழங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ், அசாருதீன் ஆகியோர் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கபில் தேவ் பேசுகையில், ''எதிரணி வீரர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட வீரர்களுக்கு பிசிசிஐ கடுமையான தண்டனை வழங்கவேண்டும். கிரிக்கெட் என்பது எதிரணிகளை தரக்குறைவாக நடத்துவதற்கு ஆடப்படுவது அல்ல. அவர்கள் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் கைகலப்பில் ஈடுபட்ட ஒரே ஒரு காரணம் போதும் என்று நினைக்கிறேன்.
ஆக்ரோஷமாகக் கிரிக்கெட் விளையாடுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த ஆக்ரோஷத்திற்கு நிச்சயம் எல்லை உண்டு. அந்த எல்லையை எப்போதும் வீரர்கள் மதிக்கவேண்டும். ஆனால் தான் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என நினைக்கிறேன். யு19 வீரர்கள் நடந்துகொண்ட விதத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.
இதனைத்தொடர்ந்து அசாருதீன் பேசுகையில், ''கிரிக்கெட்டின்போது எதிரணி வீரர்களோடு கைகலப்பில் ஈடுபடுவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. யு-19 வீரர்களோடு உடன் இருக்கும் பயிற்சியாளர்கள், பிசிசிஐ அலுவலர்கள் என்ன மாதிரியான பயிற்சிகளை அவர்களுக்கு கொடுத்துள்ளனர். மரியாதையும், கிரிக்கெட்டின் மகத்துவத்தையும் கற்றுக்கொடுக்காமல் என்ன செய்கிறார்கள் என்பது புரியவில்லை. சம்பவம் முடிந்ததையடுத்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வீரர்கள் இனியாவது மைதானத்தில் ஒழுக்கமாக நடக்கவேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: இந்திய அணியின் செயல்பாடுகள் அசிங்கமாக இருந்தன - பிஷன் சிங் பேடி சாடல்!