நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருகிறார். தற்போது கரோனா வைரஸ் காரணமாக நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், வீட்டில் குடும்பத்துடன் முடங்கியிருக்கும் வில்லியம்சன் சக வீரர் வார்னருடன் நேற்று இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். அப்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு வில்லியம்சன்,
"கோலி, டி வில்லியர்ஸ் இருவரும்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள். இவர்கள் இருவரில் ஒருவரை மட்டும் தேர்வு செய்வது சற்று கடினமான ஒன்று. டி வில்லியர்ஸ் போன்ற திறமையான வீரர் தற்போது உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகிறார்.
ஆனால், கிரிக்கெட்டின் ஆசிர்வதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் அவர் என்றுமே இடம்பெற்றிருப்பார். தற்போது கிரிக்கெட்டில் பல தரமான வீரர்கள் இருந்தாலும் நமது காலத்தில் டி வில்லியர்ஸ் மிகவும் ஸ்பெஷலான வீரர்.
கோலியைப் பொறுத்தவரையில், தான் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பசி அவரிடம் உள்ளது. அதுதான் அவரை பெரிய இலக்கை அடையச் செய்தது. அவரது ஆட்டத்தைப் பார்ப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். அதேசமயம் அந்த ஆட்டத்தின் மூலம் நாம் பல விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம்" என்று பதிலளித்தார்.
நியூசிலாந்து அணிக்காக இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் பேட்டிங் சராசரி 50.99 உடன் 6, 476 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல், 151 ஒருநாள் போட்டிகளில் 39 சதங்கள் உள்பட 6,173 ரன்களை அடித்துள்ளார்.
தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் ஃபேப் 4 என்றழைக்கப்படும் நான்கு சிறந்த கிரிக்கெட் வீரர்களில் வில்லியம்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்பது விரல்களுடன் விளையாடியது பெருமையாக இருக்கிறது - பார்த்திவ் படேல்