தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி தலா மூன்று போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இடுப்பு வலியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், காயத்திலிருந்து ரபாடா குணமாக நான்கு வாரங்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி அணிக்காக விளையாடுவார் எனத் தெரிகிறது. இதனிடையே, நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரபாடவுக்குப் பதிலாக மாற்று வீரராக யார் அணியில் இடம்பெறுவார் என்பதை தென் ஆப்பிரிக்க வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: 4 போட்டிகளிலும் வெற்றி: உலகக்கோப்பை டி20இல் மாஸ் காட்டும் இந்தியா!