இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜன.15) பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இருநாட்டு அணிகளும் பிரிஸ்பேனிற்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டீன் லங்கர், இந்த சீசன் முழுவதும் நிறைய காயம் காரணமாக பல வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இதற்கு ஒருவகையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரும் காரணம்தான். ஏனெனில் மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு வீரர்கள் முழுவதுமாக தங்களைத் தயார்படுத்தவில்லை. மேலும் கரோனா ஊரடங்கிற்கு பின் இதுபோன்ற பெரிய தொடர்களில் வீரர்கள் பயிற்சியின்றி பங்கேற்றதும் அவர்களின் காயத்திற்கான காரணங்கள் தான்.
எனக்கு ஐபிஎல் தொடர் பிடிக்கும். அது இந்தியாவின் இளம் வீரர்களுக்கான கவுண்டி கிரிக்கெட்டைப் போன்றது. இத்தொடர் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆனால் கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. அதன் காரணமாகவே பல வீரர்கள் காயத்தினால் சர்வதேச தொடர்களிலிருந்து விலகியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா என நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்கெட்டுடன் கம்பேக் கொடுத்த ஸ்ரீசாந்த்!