தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஜே.பி. டுமினி. இடதுகை பேட்ஸ்மேன், வலது கை சுழற்பந்துவீச்சாளரான இவர் 2004 இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது சிறப்பான பேட்டிங்கினால் தென் ஆப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்த இவர், 2017ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற டுமினி, தொடர்ந்து கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 தொடரிலும், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரிலும் விளையாடினார்.
இதையடுத்து, காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற மான்ஸி சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகினார். இருப்பினும், பார்ல் ராக்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு அந்த அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், 35 வயதான டுமினி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற இதுவே சிறந்த தருணம் என்றும் அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 46 டெஸ்ட், 199 ஒருநாள், 81 டி20 போட்டிகளில் விளையாடிய டுமினி பேட்டிங்கில் 9 ஆயிரத்து 154 ரன்களை குவித்துள்ளார். பவுலிங்கில் 132 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரவின் தாம்பேவால் ஐபிஎல்-லில் விளையாட முடியாது - பிசிசிஐ!