இங்கிலாந்து அணியில் தற்போது முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். தனது சிறப்பான பந்துவீச்சின்மூலம் உலகக்கோப்பை தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிமூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது வேகப்பந்துவீச்சின் மூலம், ஆஸ்திரேலிய வீரர்களை கதிகலங்கச் செய்தார்.
குறிப்பாக, அறிமுகமான மூன்றாவது போட்டியிலேயே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அதேபோல், ஓவல் மைதானத்தில் நேற்று முடிந்த ஐந்தாவது போட்டியிலும் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியதால், இங்கிலாந்து அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றார். ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதால், இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஆர்ச்சர் மொத்தம் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில், இரண்டுமுறை ஐந்து விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டதில், இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 37ஆவது இடத்தில் உள்ளார். இதில், ஆச்சரியம் என்னவென்றால் டெஸ்ட்டில் அறிமுகம் ஆவதற்கு முன் 83ஆவது இடத்தில் இருந்த அவர், ஆஷஸ் தொடரால் 46 இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.