இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் லெஜண்ட் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி. இவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை இன்னும் தன்னிடம் தக்க வைத்திருப்பவர் ஆவார். சமீபத்தில் இவர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது பயணம், ஐபிஎல் தொடர், மகளிர் கிரிக்கெட்டின் நிலை ஆகியவை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ''1997ஆம் ஆண்டில் மகளிர் கிரிக்கெட்டிற்கான உலகக்கோப்பை தொடர் நடந்தது. அதில் பார்வையாளராக கலந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது மகளிர் உலகக்கோப்பை நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் தான் நான் இருந்திருக்கிறேன். ஆனால் மேற்கு வங்க அரசு சார்பாக மகளிர் பள்ளிகளுக்கு சில டிக்கெட்டுகள் அனுப்பி வைத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் நானும் எனது பள்ளி விளையாட்டுக் குழுவில் இருந்தேன். அதனால் எனக்கும் டிக்கெட் கிடைத்தது. ஆனால் என் கிராமத்திலிருந்து கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு என்னால் தனியாக செல்ல முடியாது. அப்பா தான் என்னை அழைத்துச் சென்றார்.
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க கட்டடத்தின் முன்னால் நான் நிற்கிறேன். அப்போது அவர்கள் என்னைப் பார்த்து, நீ ஒரு பந்துவீச்சாளர் என்று அடையாளப்படுத்தினார்.
இப்போதும் என் வாழ்வின் மகத்துவமான நிமிடங்கள் அவை. மிகவும் பெருமையாக உணர்ந்தேன். அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்ளும் ’ஆண்கள் விளையாட்டை’ நான் விளையாடுகிறேன் என்ற உணர்வு இருந்தது. நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தது எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. அந்த நேரத்தில், நான் இந்த விளையாட்டில் பங்குபெறத் தொடங்கினால் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் என் வாழ்க்கையில் கிரிக்கெட் மிகவும் முக்கியமான விஷயமாக மாறியது.
ஒரு விளையாட்டு வீரராக யாரும் வயதினை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதன் மீதான உங்களின் ஆர்வம், கடின உழைப்பு, காதலுடன் அதனைத் தொடர வேண்டியது தான். இந்த சூழலில் நான் எனது ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன்.
2017ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நாங்கள் பங்கேற்றோம். அதற்கு குழுவாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதுதான் காரணம். ஸ்மிருதி, மிதாலி, ஏக்தா பிஸ்த், தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட் என நாங்கள் அனைவரும் எங்களை நம்பினோம். அதனால் தான் சிறப்பாக ஆடினோம்.
இறுதிப் போட்டியிலும் கடைசி 10 ஓவர்களில்தான் ஆட்டம் கைமாறியது. அந்த ப்ரஷரை எங்களால் கையாள முடியவில்லை. அந்த வலி இன்னும் இருக்கிறது. அதிலிருந்து நிச்சயம் விடுபட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
ஆனால் 2017ஆம் ஆண்டு தான் மகளிர் கிரிக்கெட்டிற்கான ஒரு புரட்சி ஆண்டாக அமைந்தது. மகளிர் கிரிக்கெட்டிற்கு தேவையான வேகத்தை எங்களால் கொடுக்க முடிந்தது. அந்தப் பொறியை நாங்கள் தான் பற்ற வைத்தோம்.
அதன்பின்னர் ஆடிய ஒவ்வொரு ஆண்டும் டி20 அல்லது ஒருநாள் உலகக்கோப்பையாக இருந்தாலும் சிறப்பாகவே ஆடியிருக்கிறோம்.
எனது பயோபிக் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடிக்கவுள்ளார். அது மக்களிடம் எந்தவித பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பது பதற்றத்தை அளிக்கிறது. நிச்சயம் அது நமது நாட்டின் குழந்தைகளை விளையாட்டின் பக்கம் திரும்ப வைக்கும் படமாக இருக்கும்'' என்றார்.
இதையும் படிங்க: தலைவன் இருக்கிறான் மறக்காதே!