கிரிக்கெட் பந்துகளை பளபளக்கச் செய்வதற்கும், ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கும் பந்துகள் மீது வீரர்கள் வியர்வை, எச்சில் தடவுவது வழக்கம். ஆனால், கரோனாவுக்குப் பிறகான உலகத்தில் பந்து மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்க வேண்டுமென ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடனான இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். அப்போது அவர், ”நான் எப்போது அடுத்த போட்டியில் விளையாடப் போகிறேன் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. பந்துகள் மீது எச்சில் தடவுவது அல்லது பயன்படுத்துவது எனக்கு இயல்பானது. இதனைத் தவிர்க்க நிச்சயம் பயிற்சி எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கரோனா வைரசால் பின்பற்றப்படும் தகுந்த இடைவெளி, 70,80களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளை நினைவுபடுத்தியதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "1970,80களில் நடைபெற்ற போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்தினால், அதை வீரர்கள் பெரிதாக ஒன்றுகூடி கொண்டாட மாட்டார்கள். மாறாக வீரர்கள் ஒருவருக்கொருவர் விலகி நின்று கைகளைத் தட்டுவார்கள். ஆனால் காலப்போக்கில் இவை அனைத்தும் மாறிவிட்டன" என்றார்.
33 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் 365 விக்கெட்டுகளையும், 111 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பந்துகளில் சானிடைசர்; ஐசிசியிடம் அனுமதிகோரும் ஆஸி.!