இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுடான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இஷாந்த், தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் மீண்டும் களமிறங்கி பேட்ஸ்மேன்களைத் திணறடித்து வருகிறார்.
அதிலும் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லாரன்ஸ் ஆட்டமிழந்தார். இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இஷாந்த் சர்மாவின் 300ஆவது விக்கெட் ஆகும். இதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ், ஜாகீர் கானுக்கு அடுத்து டெஸ்ட் போட்டியில் 300ஆவது விக்கெடை எடுத்த 3 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழும் இஷாந்த் சர்மா, இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் மற்றும் ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அச்சாதனையானது, இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா பங்கேற்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடும் 100ஆவது போட்டியாக அது அமையும்.
இதன் மூலம் இந்திய அணி தரப்பில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100ஆவது போட்டியில் விளையாடும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் இஷாந்த் சர்மா நிகழ்த்தவுள்ளார். முன்னதாக உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் இந்திய அணிக்காக 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இஷாந்த் சர்மா இதுவரை 99 சரவ்தேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி, 302 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: டோடிக், போலசெக் இணை சாம்பியன்!