இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 73 ரன்களையும், அறிமுக வீரர் இஷான் கிஷான் 56 ரன்களையும் எடுத்தனர்.
இப்போட்டியில் இஷான் கிஷான் அரைசதம் கடந்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதையடுத்து, இஷான் கிஷானின் அதிரடியான ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, இஷான் கிஷான்தான் நேற்றைய ஆட்டத்தின் நாயகன் என புகழந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா, "இப்போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பானதாக அமைந்தது. ஆனால், நேற்றைய போட்டியின் நாயகன் அறிமுக வீரர் இஷான் கிஷான்தான். அவரது விளையாட்டு திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர் தற்போது ஒரு அற்புதமான ஃபார்மிற்கு வந்துவீட்டார்.
அவர் உயரம் குறைந்தவராக இருந்தாலும், பந்தை கணித்து விளையாடும் திறன் படைத்தவராக இருக்கிறார். அவர் தனது சிக்சர் அடிக்கும் திறனை நம்புகிறார். அவர் ஒரு உண்மையான ஆட்டத்தை மாற்றும் திறன் படைத்தவர்" என்று புகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 'நான் செய்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்' - பி.வி. சிந்து